Wednesday 6 January 2016

ஸ்ரீமத் ஆசார்யாள் அருளிய ஸமஸ்யா பூரணம்.

ஸ்ரீமத் ஆசார்யாள் அருளிய ஸமஸ்யா பூரணம்.


சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தில் 34ஆவது பீடாதிபதியாக விளங்கிய ஸ்ரீஸ்ரீ சந்திர சேகர பாரதி மஹாஸ்வாமிகள் மஹா மேதையாவார். இணையற்ற ஸம்ஸ்க்ருத பண்டிதராகிய ஸ்வாமிகள் தம் புலமையினால் இதர பண்டிதர்களை மெய் சிலிர்க்க வைத்திட்ட தருணங்கள் பற்பல. உதாரணத்திற்கு 'ஸமஸ்யா பூரணம்' என்பதை எடுத்துக்கொள்ளலாம்.

நான்காவது பாதத்தை மாத்திரம் சொல்லி அதன் அர்த்தத்திற்குப் பொருந்தும்படி மற்ற மூன்று பாதங்களையும் ரசனை செய்து கொடுக்கவேண்டியது என்பது ஸமஸ்யா பூரணம் என்பதன் தாத்பர்யம். சில ஸமயங்களில் நான்காவது பாதத்திற்கே அர்த்தம் புரியாமல் கொடுத்துவிடுவார்கள். அதையும் ஸமர்த்தனம் செய்து கொண்டு மற்ற மூன்று பாதங்களையும் கல்பிக்கவேண்டுமானால் மேதையும் கவிதா சக்தியும் விசேஷமாக இருந்தாலன்றி முடியாது. ஸ்ரீமத் ஆசார்யார் பால்யத்தில் இவ்விதமான ஸமஸ்யா பூரணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்.

ஒரு நான்காவது பாதத்தின் அர்த்தம் "மலடிமகன் தன் தாயாரை இடைவிடாமல் பார்த்துக்கொண்டு சிரிக்கிறான் " என்று ஆகிறது. மலடி மகனே கிடையாது, அவனுக்குத் தாயார் இருந்தால் அவள் மலடியாயிருக்கமுடியாது. அவளே இல்லாத போது பார்க்கிறது எப்படி? சிரிக்கிறது எப்படி? இதை ஸ்ரீமத் ஆசார்யார் பின்வருமாறு ஸமர்த்தனம் செய்தார்கள்:-

மோக்ஷ: கர்மைகலப்ஸ்த்வத சிதிஸஹிதாத் கர்மணோ வ யதி ஸ்யாத்
ஞானம் ஸ்ரீதேசிகேந்த்ரப்ரவரகுருக்ருபா பூர்ணவீக்ஷாம் விநா ஸ்யாத்|
கர்மானுஷ்டானமுஜ்ஜன் ஜந இஹ லபதே சித்தசுத்திம் ததா வை
வந்த்யாஸூநூ: ஸ்வமாதுர் முகமநவரதம் வீக்ஷ்ய ஹாஸம் கரோதி||

“மோக்ஷம் என்பது கர்மாவினாலேயே கிடைக்கக்கூடியது என்றோ, ஞான(உபாஸன)த் தோடு சேர்ந்த கர்மாவினால் கிடைக்கக்கூடியது என்றோ ஏற்பட்டதேயானாலும், உபதேசம் செய்ய வல்லமையுள்ள குருச்ரேஷ்டரின் பரிபூர்ண கிருபா கடாக்ஷம் இல்லாமலேயே ஞானம் ஏற்படுமானாலும், கர்ம அனுஷ்டானத்தை விட்டுவிட்ட ஒரு மனிதன் மனத்தூய்மையை அடைவானாகிலும், அப்பொழுது மலடி மகனும் தன் தாயாரின் முகத்தை எப்பொழுதும் பார்த்துக்கொண்டு சிரிப்பான்.

(சமத்காரமாகச் சொல்லும் இந்த சுலோகத்தில் எத்தனை சாஸ்திரார்த்தங்களை ஸ்ரீமத் ஆசார்யார் அடக்கியிருக்கிறார் என்பதை நன்கு கவனிக்க வேண்டும். கர்மாவினாலேயே மோக்ஷம், அல்லது ஞான கர்ம ஸமுச்சயத்தினால் மோக்ஷம், என்பது ஒரு நாளும் ஸாத்தியமாகாது. மோக்ஷத்திற்கு ஸாதனம் ஞானம்தான். அதுவும் பரிபூர்ணமாயுள்ள குரு கிருபை இருந்தால்தான் ஏற்படும். அவ்விதம் குரு கிடைக்கவும், அவரை அண்டி உபதேசம் பெறவும், அவ்வுபதேசத்தை நன்கு கிரஹிக்கவும், மனஸ் அதிபரிசுத்தமாயிருந்தாலன்றி முடியாது. அந்த பரிசுத்தத் தன்மை ஏற்படவேண்டுமானால் சாஸ்திர விஹிதமான கர்மாக்களை அநுஷ்டித்தே தீரவேண்டும். இவ்விதமாக கர்மா மோக்ஷத்திற்கு ஸாக்ஷாத்தாக காரணமாகாமல் போனாலும் சித்த சுத்தியை உண்டாக்குவது மூலமாய் பரம்பரையாக் காரணமாகிறது.)

இன்னொரு ஸமயம் "பர்த்தா பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஒருத்தி ஆசையோடு மாமனாரை ஆலிங்கனம் செய்து கொண்டாள்" என்ற அர்த்தமுள்ள நான்காவது பாதம் கொடுக்கப்பட்டபோது ஸ்ரீமத் ஆசார்யார் இவ்விதம் ஸமர்த்தனம் செய்தார்கள்:-

சிதே புண்யே க்ஷீணே சசினி ககநே ராஜதி தத:
ஸமுத்ரே தாரா காப்யபதத் இதமுத்வீக்ஷ்ய கவய: |
வதந்த்யேவம் லோகே ரஸிக ஹ்ருதயாஹ்லாதனகரா:
புர: பத்யு: காமாத் ச்வசுரமியமாலிங்கிதவதீ ||

சேர்த்துவைத்த புண்ணியம் தீர்ந்தவுடன் அதுவரை நக்ஷத்திர ரூபனாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் போதே ஆகாசத்திலிருந்து ஸமுத்திரத்தில் விழுந்து விடுகிறான். இதை நன்கு கவனித்த கவிகள் ரஸிகர்களுடைய மனதிற்கு ஸந்தோஷத்தைக் கொடுக்க உத்தேசித்து இவ்விதம் உலகில் வர்ணிக்கிறார்கள்.

நக்ஷத்திரம் என்பதற்கு ஸ்த்ரீலிங்கத்தில் உள்ள தாரை என்ற சப்தத்தை எடுத்துக்கொண்டால் தாரா நாயகரென்று சொல்லப்படும் சந்திரன் பர்த்தாவாக ஆகிறான். அந்த சந்திரன் பிறந்த இடம் ஸமுத்திரமானதனால், ஸமுத்திரம் தாரைக்கு மாமனாராவார். சந்திரன் ஆகாசத்தில் பிரகாசித்துக்கொண்டேயிருந்தும் அவரை விட்டுவிட்டுக் கீழே உள்ள ஸமுத்திரத்தில் தாரை பாயவேண்டுமானால் ஸமுத்திரத்தனிடத்தில் அதிக ப்ரீதி இருப்பது போல் தோன்றும். இக்கருத்தையனுஸரித்து “பர்த்தாவிற்கு முன்னாலேயே ஆசையோடு ஒருத்தி மாமனாரை ஆலிங்கனம் செய்தாள் என்று.”

இந்த சுலோகத்திலும் கர்மா செய்து அடையக்கூடிய பதவி எவ்வளவு பெரிதாயிருந்தாலும் அதற்கு ஒருநாள் அழிவு உண்டென்பதை ஸ்ரீமத் ஆசார்யார் ஞாபகப்படுத்துகிறார். (2)
“கொழுந்துவிட்டெரிகிற தீயின் நடுவில் தாமரைகள் மலருகின்றன" என்று நான்காவது பாதம் சொன்னால் இது ஸாத்தியமேயில்லாத கார்யமல்லவா என்று தோன்றும். அப்படியும் ஒரு காலத்தில் மலர்ந்தன என்பதைக் காட்டுகிறேன் என்கிறார் ஸ்ரீமதாசார்யார்.

அமருக ந்ருப மந்த்ரி ப்ரேரிதைர் தூதவர்கை:
ஸுஷிர நிஹித தேஹே வஹ்நிநா தீப்யமாநே|
வதந நயந பாதாதீனி யோகீந்த்ரராஜ:
ஜ்வலித தஹந மத்யே பங்பஜான் யுல்லஸந்தி||

ஸ்ரீமத் சங்கர பகவத்பாதாசார்யார் விசுவரூப மண்டன மிச்ரரை வாதத்தில் ஜயித்த பிற்பாடு உபயபாரதீ என்றும் ஸரஸவாணீ என்றும் சொல்லப்பட்டுவந்த அவர் பார்யை, “தன்னையும் ஜயித்தால்தான் பர்த்தா பூராவும் ஜயிக்கப்பட்டவராவார்” என்று சொல்லவே அவளுடன் வாதத்திற்கு ஆரம்பித்து எதற்கும் ஸ்ரீமத் ஆசார்யார் தக்கபடி பதில் சொல்லி வருவதைக்கண்டு அவருக்குப் பரிச்சயமில்லாத காம சாஸ்திரத்தில் கேட்க ஆரம்பித்தாள். “இதற்கும் பதில் சொல்கிறேன், ஆனால் கொஞ்சநாள் அவகாசம் கொடுக்க வேண்டும்” என்று ஆசார்யாள் அவளிடம் சொல்லிக்கொண்டு அங்கிருந்து கிளம்பி ஸஞ்சாரம் செய்து கொண்டிருக்கையில் அமருகன் என்ற அரசன் இறந்து போய் அவன் உடலை அந்த்ய ஸம்ஸ்காரத்திற்காக ஸ்மசானத்திற்கு எடுத்துக்கொண்டு போயிருக்கும் விவரம் அறிந்து தன் யோகசக்தியினால் ஸ்ரீமத் ஆசார்யார் அந்த சரீரத்துக்குள் பிரவேசித்துக்கொண்டார். உடனே அரசனுக்கு உயிர் வந்து விட்டதாக மறுபடியும் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள். அந்த சரீரத்தில் இருக்கும்போது காமசாஸ்திர ஸூக்ஷ்மங்களை அறிந்து கொள்ள ஸௌகர்யம் கிடைத்தது.

அரண்மனையிலிருந்த ஸ்திரீகளும் முன் இருந்த அரசனுக்கும் இப்பொழுதுள்ள அரசனுக்கும் நிறைய வித்யாஸமிருப்பதைக்கண்டு இவர் யாரோ மஹான், இந்த சரீரத்தில் நுழைந்திருக்கிறாரென்று ஊகித்துக்கொண்டு அவருடைய நிஜமான சரீரம் எங்கேயாவது இருக்கும், அதை எரித்துவிட்டால் இங்கேயே தங்கிவிடுவார் என்று ஆலோசனை செய்து அவ்வித சரீரம் அகப்பட்டால் உடனே எரித்துவிடும்படி உத்தரவு செய்து தூதர்களை அனுப்பினார்கள். அவர்கள் பல இடங்களில் தேடி, கடைசியாக ஸ்ரீமத் ஆசார்யாருடைய சரீரத்தையே கண்டுபிடித்து அதை எரிக்க ஆரம்பித்தார்கள். முன்னதாக சிஷ்யர்கள் ஓடிப்போய் நகரத்திலுள்ள அரசனுக்கு காதில் படும்படியாக மறைமுகமாக சில வார்த்தைகள் சொன்னார்கள். அதைக்கேட்டதும் ஸ்ரீமத் ஆசார்யார் அந்த உடலை விட்டு, தன் உடலுக்கு வந்து அங்கு அக்னியால் ஏற்பட்ட தாபத்தை நீக்கி அருளும்படி ஸ்ரீலக்ஷ்மீநரஸிம்மஹரை ப்ரார்த்தித்தன் பேரில் அப்படியே அக்னியால் எவ்வித துன்பமும் ஏற்படாமல் வெளிக்கிளம்பினார். இந்தக் கதை சங்கர விஜயங்களில் காண்கிறது. இதையே இந்த சுலோகத்தில் கண்டிருக்கிறது.

‘அமருக ராஜனுடைய மந்திரிகளால் ஏவப்பட்ட தூது கோஷ்டிகள் குகையிலிருந்த சரீரத்தை நெருப்பினால் எரிக்கையில், யோகி சிரேஷ்டர்களுக்கெல்லாம் அரசரான ஸ்ரீமத் சங்கர பகவத்பாதரின் முகம் (ஆகிற கமலம்) கண்கள் (ஆகிற கமலம்) பாதங்கள் (ஆகிற கமலம்) முதலான கமலங்கள் எல்லாம் எரிகிற அக்னியின் மத்தியில் நன்கு மலர்ந்து பிரகாசித்தன.’

(ஸ்ரீலக்ஷ்மீநரஸிம்ஹ தியானம் செய்யும்போது ஹ்ருதய கமலம் மலரும். வாயால் ஸ்தோத்திரம் செய்யும்போது முக கமலம் விகஸிக்கும். கைதூக்கிவிட வேண்டும். “மம தேஹி கராவலம்பம்” என்று பிரார்த்திக்கையில் கையை நீட்டும்போது புஜகமலம் பிரகாசிக்கும். பிரார்த்தனை முடிந்து கண்களைத் திறக்கும்போது நயன கமலங்கள் சோபிக்கும். பிறகு அக்னியிலிருந்து வெளிக்கிளம்பும்போது பாதாரவிந்தங்கள் தென்படும். இவ்விதமாக பல கமலங்கள் அக்னியிலிருந்து மலர்ந்து வெளிவந்திருந்திருக்கின்றன.)

‘எப்படி பல்லைப்பிடுங்கின பாம்புகள் பின்னால் மிகவும் துக்கப்படுமோ’ என்ற அர்த்தத்தைக் கொண்ட நான்காவது பாதத்திற்குத் தக்கபடி மற்ற மூன்று பாதங்களில் இதை திருஷ்டாந்தமாக வைத்து விஷயம் சொல்லவேண்டும்.

தேஹேபூர்வம் த்ருடே யே நிகில விஷய நிஷ்கம்ப போகைகசீலா:
ஆஸன் ஸர்வேந்த்ரியேஷு ப்ரதிஹதபடுதேஷ்வங்ககே சக்திசூன்யே |
தேsக்னௌ துந்தே ச மந்தேப்யவிஜிதஹ்ருதயா போகலாபைகலோபா:
சேகித்யந்தே ச பச்சாதபஹ்ருதாதநா கூடபாதா யதா வா ||

எவர்கள் முன்னால் சரீரம் திடமாக விருக்கும்போது எல்லா விஷயங்களையும் கொஞ்சமேனும் ஸங்கோசமில்லாமல் அனுபவிப்பதையே ஸ்வபாவமாகக் கொண்டவர்களாக இருந்தார்களோ அவர்களுக்குப் பின்னால் ஸகலவிதமான இந்திரியங்களும் ஸாமர்த்தியமற்றுப் போய் சரீரத்தில் சக்தியில்லாமலும் வயிற்றில் ஆஹாரத்தை ஜீரணிப்பதற்குக்கூட அக்னி மிகவும் மந்தமாயும் இருக்கையிலும் கூட மனத்தில் தோன்றும் ஆசைகளை ஜயிக்காதவர்களாகவும் விஷய சுகத்தையடைவதிலேயே துராசையுள்ளவர்களாகவும் இருந்து கொண்டு அவர்கள் பல்லைப் பிடுங்கின 
பாம்புகள் எப்படியோ அப்படியே மிகவும் துக்கத்தை அடைவார்கள்.

“மஹான்கள் எடுத்துக்கொண்ட கார்யம் நிறைவேறுவதற்கு அவர்களுடைய சொந்த பலம் வேண்டியதே தவிர, இதர ஸாதனங்களாகிய பக்க பலங்களை அபேக்ஷிக்கிறது கிடையாது” என்கிற தத்வத்தைக் கூறும் நான்காவது பாதத்திற்குத் திருஷ்டாந்தமாக ஸ்ரீமத் சங்கரபகவத்பாதரையே ஸ்ரீமத் ஆசார்யார் குறிப்பிடுகிறார்:-

ந சஸ்த்ரம் நோ வாஸ்த்ரம் ந ஸமார ரதோ நைவ ச படா:
ந ஹஸ்தீ நாப்யச்வ: ததபி பகவான் சங்கர குரு: |
விஜிக்யே ஸர்வானப்யஹ ஸ விமலாத்வைத வசஸா
க்ரியா ஸித்தி: ஸத்வே பவதி மஹதாம் நோபகரணே ||

“சஸ்திரம் இல்லை. அஸ்திரமும் இல்லை. யுத்தத்திற்கு வேண்டிய ரதமும் இல்லை. ஸைநிகர்கள் இல்லை. யானையும் இல்லை. குதிரையும் இல்லை. அப்படியிருந்தும் ஸ்ரீ சங்கர பகவத்பாதாசார்யார் சுத்தமான அத்வைதத்தைக்கூறும் வார்த்தையினால் எல்லாரையும் ஜயித்தாரே! என்ன ஆச்சர்யம்! மஹான்களுக்கு கார்யம் நிறைவேறுவது அவர்களுடைய பலமிருந்தால் ஏற்படும், வேறு ஸாதனங்களால் ஏற்படுகிறது என்பதில்லை."

(இவ்விதமாக விளையாட்டாகச் சொல்லியிருக்கும் சுலோகங்களில் கூட ஸகல சாஸ்திர ஸித்தாந்தத்தையும் ஸ்ரீமத் சங்கர பகவத்பாதரிடமிருந்த விசேஷ பக்தியையுமே ஸ்ரீமத் ஆசார்யார் வெளியிட்டிருக்கிறார்.)

No comments:

Post a Comment